Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 3 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையில் இன்று (டிச 03) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளனர். 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக கார்த்திகை தீபம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோயில் வரைபடம், நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளையும் அறிந்து கொள்ளலாம்.
தற்காலிக பேருந்து நிலையம், பார்க்கிங், மருத்துவ முகாம்கள் குறித்த விவரம் செயலியில் உள்ளது. புதிய செயலியை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இவ்விழாவில் பங்கேற்கும் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகம் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் சார்பில் கைகளில் பெற்றோரின் செல் நம்பர் மற்றும் குழந்தையின் பெயர், வாட்ஸ் அப் எண்கள் எழுதப்பட்ட டேகை குழந்தைகளுக்கு அணிவித்து வருகின்றனர்.
மேலும் குழந்தைகள் பாதுகாப்பாக பெற்றோரிடம் செல்வதற்காகவும், அறிவுறுத்தும் வகையிலும் இந்த பேச் முறையை கோயில் நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்களிலிருந்து வரும் இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b