Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 3 டிசம்பர் (ஹி.ச.)
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், மகா தீபத் திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாத பௌர்ணமியன்று நடைபெறும். இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழாக கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டீகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்னர், இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு மகா ’பரணி தீபம்’ ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வின்போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அப்படி, வீதியுலா வரும்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே பாரம்பரியமாக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலையில் இன்று (டிச.3) நடைபெறும் திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் போது, உற்சவர் அருணாசலேசுவரருக்கு சாற்றுவதற்காக அலங்கார மலர் மாலைகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று (டிச.2) நடைபெற்றது.
163 ஆவது ஆண்டாக, காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் தலைவர் கே.கே.சிவகுமாரன் குத்து விளக்கேற்றி வைத்தும், மாலைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலங்கார மாலைகளுக்கு தீபாராதனைகளும் காண்பித்தார். பின்னர் இந்த மாலைகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த மாலைகளை வணங்கிச் சென்றனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில், புகழ்பெற்ற ‘மரக்கா மாலை’ எனக் கூறப்படும் 12 அடி நீளம் கொண்ட மாலையை தயார் செய்வார்கள்.
மேலும் மூலவர், உற்சவர், அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், முருகர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட அனைத்து சாமிகளுக்கு சாற்றப்படும் இந்த மாலை, சுமார் 12 மணி நேரத்தில் 50 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
Hindusthan Samachar / ANANDHAN