Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 30 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி புஸ்சி வீதியில் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் இன்று
(டிசம்பர் 30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு மூன்று மருந்தகங்களில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி மருந்தகங்களின் ஷட்டர் கதவை இழுத்து மூடினர்.
அங்கிருந்த மாத்திரைகளை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அப்பகுதியில் செயல்படும் பல்வேறு மருந்தகங்களுக்கும் சென்று போலி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
புதுச்சேரியில் போலி மருத்து தயாரித்தல், போலி மருந்து விற்பனை சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை, சிபிஐ விசாரணை என கடந்த ஒரு மாத காலமாக புதுச்சேரி மாநிலத்தை போலி மருந்து விவகாரம் ஆக்கிரமித்து உள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறையின் அதிகாரிகள் பல சில்லறை மருந்து கடைகளில் ஒரு சில மருந்துகளை பரிசோதனைக்காக அனுப்பி உள்ளதாக தெரிகிறது.
அதில் புஸ்சி வீதியில் செயல்படும் 3 மருந்து கடைகளில்
(செம்பருத்தி, ஸ்ரீ குகா) போலி மருந்துகள் கண்டறியப்பட்டு மருந்து விற்பனை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டு இருந்த அந்த மூன்று மருந்து கடைகளிலும், மருந்து விற்பனை செய்யப்படுவதாக மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு நான் சென்று பார்க்கும் பொழுது மேற்கூறிய கடைகளில் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் ஏன் கடை திறந்து வைத்திருக்கிறீர்கள் என கேட்டு மேற்கூறிய கடைகளை மூடும்படி வலியுறுத்தினோம்.
புஸ்சி வீதியில் உள்ள மருந்து கடைகளில் போலி மருந்துகளை தயவு செய்து யாரும் விற்பனை செய்யாதீர்கள் என்றோம். போலி மருந்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
துறை அதிகாரிகளுடன் ஒரு வெள்ளை அறிக்கையை சுகாதாரத்துறை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி வெளியிட வேண்டும்.
என்று அன்பழகன் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b