Enter your Email Address to subscribe to our newsletters

ராம் நகர், 30 டிசம்பர் (ஹி.ச.)
2023-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், இரண்டாவது இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமாரும் முதல்வராகப் பதவிவகிக்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கன் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதன்படி, நவம்பர் 20ஆம் தேதி இரண்டரை ஆண்டுகால பதவியை நிறைவு செய்துள்ள சித்தராமையா, தனது பதவியை டி.கே. சிவகுமாருக்கு விட்டுத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் நடந்து வருகிறது.
டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருமாறு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சித்தராமையாவை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை உள்ளூர் அளவிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கட்சி மேலிடத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கும் தானே முதல்வராக நீடிக்கப் போவதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் பதவிக்காக அவசரப்படவில்லை என்று டி.கே. சிவகுமாரும் கூறினார். இதனால் அது தொடர்பான விவாதங்கள் குறைந்திருந்த நிலையில் ஜனவரி 6-ஆம் தேதி டி.கே.சிவகுமார் முதல்வராகப் பதவியேற்பார் என்று 2 வாரங்களுக்கு முன்பு கூறியிருந்த அதே கருத்தை காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரி கூறியுள்ளார்.
இது குறித்து ராமநகரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
நான் ஏற்கெனவே கூறியபடி, ஜனவரி 6 அல்லது 9-ஆம் தேதி தற்போதைய துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்பார். இதை என் விருப்பப்படி கூறவில்லை. சிலவற்றை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை கடவுள் சிலருக்கு அளித்துள்ளார்.
அதன்படி, சரணர் பசவண்ணர் கருத்துகளை கூறும் துறவி ஒருவரிடம் நான் கேட்டறிந்தபடி முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறுகிறேன்.
இது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. மழை வருவதை சிலர் முன்கூட்டியே கணிப்பதில்லையா. அது போலத்தான் டி.கே. சிவகுமார் முதல்வராவதையும் சரணர்கள் கணித்திருக்கிறார்கள்.
என்றார் அவர்.
Hindusthan Samachar / JANAKI RAM