புற்று நோய் மையம் சார்பில் இந்தியாவில் முதன் முறையாக மேம்பட்ட கருப்பை புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை
கோவை, 30 டிசம்பர் (ஹி.ச.) கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஜெம் புற்று நோய் மையம் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட
கோவை


கோவை, 30 டிசம்பர் (ஹி.ச.)

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஜெம் புற்று நோய் மையம் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு முக்கியமான மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனை குறித்து ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பழனிவேலு, மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் டாக்டர் கவிதா, டாக்டர் சாய் தர்ஷினி, மற்றும் HIPEC நிபுணர் டாக்டர் பரத் ரங்கராஜன் ஆகியோர் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களைச் சந்தித்து விரிவாக விளக்கினர்.

பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ் என்பது மேம்பட்ட கருப்பை, குடல் மற்றும் வயிற்றுப் பகுதி புற்றுநோய்களில் காணப்படும் கடுமையான நிலையாகும். இதற்கு முன், இந்த நிலையில் கீமோதெரபி மற்றும் திறந்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்ததாக டாக்டர் பழனிவேலு தெரிவித்தார்.

ஆனால், பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் அதிக ரத்த இழப்பு, நீண்ட மீட்பு காலம் மற்றும் அதிக சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இன்றைய நவீன லேபரஸ்கோபிக் (Keyhole) தொழில்நுட்பம், உயர் தெளிவு பெரிதாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் ICG ஃப்ளூரசென்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன், வயிற்றுக்குள் உள்ள முழு பெரிட்டோனியத்தையும் மிகத் துல்லியமாக அகற்ற முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை ஐந்து நோயாளிகளில் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் அனைவரும் அறுவை சிகிச்சைக்கு முன் நியோஅட்ஜுவன்ட் கீமோதெரபி பெற்ற பின்னர், லேபரஸ்கோபிக் சைட்டோரெடக்டிவ் சர்ஜரி, ராடிக்கல் ஹிஸ்டெரெக்டமி மற்றும் முழுமையான பெரிட்டோனெக்டமி ஆகிய அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சில நோயாளிகளுக்கு, இதனுடன் லேபரஸ்கோபிக் HIPEC முறையும் வழங்கப்பட்டது.

இந்த குறைந்த துளை அறுவை சிகிச்சை முறையால், விரைவான மீட்பு, குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு, குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம் கிடைப்பதாக மருத்துவ குழு தெரிவித்தது.

இந்த சிகிச்சை, மேம்பட்ட கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புதிய நம்பிக்கையையும் மேம்பட்ட சிகிச்சை வாய்ப்பையும் வழங்குகிறது என அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / Durai.J