Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம்,30 டிசம்பர் (ஹி.ச)
தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையேயான ஆன்மீக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டது.
கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் நிறைவு விழா இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இதில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் இந்திய துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றியதாவது;
காசியும், தமிழ்நாடும் இந்திய நாகரிகத்தின் ஒளி விளக்குகள் என்று குறிப்பிட்ட அவர், இந்த சங்கமம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஆன்மீக உறவின் பந்தமாக திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
தமிழ் கலாசாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது, தமிழ் இந்தியாவின் பெருமை. காசி–தமிழ்ச் சங்கமம் மூலம் உலகின் மிகத் தொன்மையான மொழியும், உலகின் மிகத் தொன்மையான நகரங்களில் ஒன்றான காசியும் ஒன்றிணைகிறது” என மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் காசி–தமிழ்ச் சங்கமத்தைப் பற்றி மிக அழகாகப் பேசியதை துணைக்குடியரசுத் தலைவர் நினைவூட்டினார்.
பாரதியார் கண்ட ஒருங்கிணைந்த, ஒற்றுமையான, உறுதியான பாரதம், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையாலும், கூர்மையான திட்டங்களாலும் இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சங்கமம் விக்சித் பாரத் என்ற உன்னத இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும் என்று துணைக்குடியரசுத் தலைவர் வாழ்த்தினார்.
மேலும், விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழில் பேசினார்.
தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என பாரதி பாடினார் என்பதனை மேற்கோள் காட்டி பேசினார்.
பாரதியாரின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றுவதாகவும், காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான தொடர்புக்கு ராமாயண கதையை சாட்சி என்றும் பேசினார்.
மதிய இணை அமைச்சர் எல். முருகன் பேசியதாவது;
பிரதமர் தொடங்கி வைத்த காசி தமிழ் சங்கமம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் பல நூறு ஆண்டுகளாக தொடர்பு உள்ளது.
எட்டுத்தொகையிலும், கலித்தொகையிலும் காசியை பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளது.
காசியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்வதும், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் காசிக்கு செல்வதும் ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. இந்த கனவை தீர்க்கும் விதமாக காசி தமிழ் சங்கமம் விளங்குகிறது.
பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் பண்பாடு ஆகியவற்றை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறார்.
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam