மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக தலைமை என்பது தான் அதிகாரப்பூர்வமான உண்மை - ஜி.கே.வாசன் பேட்டி
மதுரை, 30 டிசம்பர் (ஹி.ச.) சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. எதிர்மறை வாக்கு ஆட்
GK Vaasan


மதுரை, 30 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. எதிர்மறை வாக்கு ஆட்சியாளர்களுக்கு அதிகரித்து வருகிறது. கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அரசுக்கு எடுத்துக்காட்டாக எல்லா பக்கங்களிலும் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மழுப்பிக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை நிலை இன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களிலே வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற முடியாது என்று வாக்காளர்களுக்கு நன்று தெரியும்.

எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் கட்சிகள் சேரக்கூடிய நல்ல வாய்ப்பு வரும் நாட்களில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் கட்சியில் இன்னும் அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் வருவார்கள் என்று செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு,

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றால் மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக தலைமை என்பது தான் அதிகாரப்பூர்வமான செயல்பாடு என்றார்.

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு,

தமாகவை பொறுத்த வரை இதற்கு நிரந்தர தீர்வு வரவேண்டும். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குள் செல்ல வேண்டும் அப்போதுதான் அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவு கண்டெடுக்க வேண்டும். குறிப்பாக இலங்கை அரசுக்கு நம்முடைய வெளியுறவுத்துறை மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது. அதனை கண்டிக்கும் வகையில் இந்திய செயல்பாடுகள் இருக்க வேண்டும். இலங்கை அரசு உண்மை நிலைக்கேற்றவாறு அவர்களுக்கு கோட்பாடுகள் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற கண்மூடித்தனமாக செயல்பட மாட்டார்கள். இலங்கை கடல் கொள்ளையர்களையும் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாடுகளின் கடற்படை தங்களுடைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு,

நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதுதான் முதல் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN