உரிய வயதை அடைந்தவர்கள் அவர் விரும்பியவருடன் செல்வது தனிப்பட்ட விருப்பம் - நீதிமன்றம் கருத்து
மதுரை, 30 டிசம்பர் (ஹி.ச.) திருச்சியை சேர்ந்த செவிலியர் ஒருவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் வீட்டிற்கு வந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். தொடர்ந்து, பணிபுரியும் மருத்துவமனைக்கும் அவர் செல்லாத
Madurai High Court


மதுரை, 30 டிசம்பர் (ஹி.ச.)

திருச்சியை சேர்ந்த செவிலியர் ஒருவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் வீட்டிற்கு வந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார்.

தொடர்ந்து, பணிபுரியும் மருத்துவமனைக்கும் அவர் செல்லாததால் அவருடைய பெற்றோர் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், காணாமல் போன தனது மகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, பெண்ணின் தந்தை கருப்பண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு குறித்த வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிபதிகள்,

மாயமான பெண்ணை இன்று (டிச.30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன்னிலை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த பெண் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார். நீதிபதிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பெண், நான் தன்னுடன் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபருடன் திருமணம் செய்து கொண்டேன்.

என்னை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம் அளித்தார். அதற்கு நீதிபதிகள், குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள், காதலிக்க அல்ல. காதல் திருமணம் பங்குச்சந்தை போன்று ஏற்ற, இறக்கம் உண்டு.

நீங்கள் விரும்பியவர் உடன் செல்வது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

நீங்கள் படித்தவர்கள், உங்கள் பெற்றோரிடம் முறையாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். உங்கள் பெற்றோரை சமாதானம் செய்திருக்கலாம். அவர்களை இப்படி நீதிமன்றம் வாயிலாக உங்களை காண செய்வதா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், தற்போதைய கால கட்டத்தில் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், அந்த பெண்ணிடம் உங்கள் கணவருடன் சென்று பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் என அறிவுரை வழங்கினர்.

இதனைக்கேட்ட பெண்ணின் பெற்றோர், நாங்கள் வயதானவர்கள், எங்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என கண்ணீர் வடித்தனர்.

ஆனால் நீதிபதிகள், உங்கள் பெண் திருமணத்திற்கான உரிய வயதை அடைந்து விட்டார்.

திருமணமாகி அவர் கணவருடன் சென்றுவிட்டார்.

இதில் நாங்கள் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN