Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 30 டிசம்பர் (ஹி.ச.)
ஆங்கில புத்தாண்டு வருகிற
1-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில், மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் பிரசன்னகுமார், வினோத் சாந்தாராம் ஆகியோர் மேற்பார்வையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் இரவில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை வரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் மார்க்கெட்டுகள், மருத்துவமனைகள், கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் இருக்கும் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்
நெல்லை மாநகர பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். 31-ந்தேதி காலை முதல் 1-ந்தேதி இரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.
விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நள்ளிரவில் வாலிபர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் செல்வதை கட்டுப்படுத்திட முக்கிய இடங்களில் கூடுதல் பேரிகார்டுகள் அமைத்து கண்காணிப்பு நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் மேலப்பாளையத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து இளைஞர்கள் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீடுகளில் இருந்து வெளியே செல்வதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
அதேபோல் ரெட்டியார்பட்டி மலை அருகே நான்குவழிச்சாலை, வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலைகளில் நாளை இரவு முழுவதும் போலீசார் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கே.டி.சி.நகர் மேம்பாலம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் ரேஸ் செல்வதை தடுக்க ரோந்து நடத்தப்பட உள்ளது.
நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும். இதனால் அங்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.
ரேஸ் செல்கிறவர்கள் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அந்த வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே போலீசாருடன் ஆயுதப்படை, மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட உள்ளனர்.
இதேபோல் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்து அனுப்பிட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். புறநகர் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, மானூர், அம்பை, வீரவநல்லூர், சேரன்மாதேவி, ராதாபுரம், பணகுடி களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரில் புத்தாண்டையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள், அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் உள்பட சில போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் 10 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மாவட்டத்தில் சுமார் 1,345 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ள நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அவர்களை அந்தந்த உட்கோட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும், அந்த ரவுடிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்திடவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN