Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச)
பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் 2026 புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், 2026ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், காவல் இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2025 (புதன்கிழமை) அன்று இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
(2)
மேலும், 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட, வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2025 மாலை முதல் 01.01.2026 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) στο ω @ மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் Drone Camera க்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் தகுந்த மாற்றுவழி ஏற்பாடுகளை பயன்படுத்திட வேண்டும்.
கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் (Anti Drowning Unit) இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையாக, எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ