Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச)
மார்கழி மாதத்தின் மிக உன்னதமான திருவிழாவான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று இந்தியா முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் சொர்க்கவாசல் எனப்படும் 'பரமபத வாசல்' கோலாகலமாகத் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் முதல் திருமலை திருப்பதி வரை அனைத்து பெருமாள் கோவில்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பக்திப்பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், இன்று (டிசம்பர் 30) அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல், இன்று காலை திறக்கப்பட்டது.
பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார். எதிர்சேவையில் காட்சி தந்த பார்த்தசாரதி பெருமாளை, கோவிந்தா... கோவிந்தா... என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பார்த்தசாரதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, பெருமாளை தரிசித்து சென்றனர். இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.
Hindusthan Samachar / vidya.b