வரும் 2026-2027-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை
புதுடெல்லி, 30 டிசம்பர் (ஹி.ச.) அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் வரிவிதிப்பு , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி , உலக நாடுகளிடையே நடைபெறும் போர்,பல மாநில சட்டமன்ற தேர்தல்கள் உள்ளிட்டவைக்கு மத்தியில் 2026-2027 ஆம் நிதியாண்டுக்
மோடி


புதுடெல்லி, 30 டிசம்பர் (ஹி.ச.)

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் வரிவிதிப்பு , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி , உலக நாடுகளிடையே நடைபெறும் போர்,பல மாநில சட்டமன்ற தேர்தல்கள் உள்ளிட்டவைக்கு மத்தியில் 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 2ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

2026ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் தொடங்குவதால் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் மத்திய பட்ஜெட் தொடங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய நிதி நிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுடன் பல கட்ட ஆலோசனைக் கூட்டங்களை கடந்த நாட்களில் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள நிதி ஆயோக்-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய நிதித்துறை அமைச்சர், செயலாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 2047ம் ஆண்டை மையமாக கொண்டு 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்பதை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் பொருளாதாரம் மற்றும் நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam