Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 30 டிசம்பர் (ஹி.ச.)
சர்வதேச சுற்றுலா தலமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதற்காக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருவர்.
அந்த வகையில் வருகிற 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நாளை இரவு நடைபெறவுள்ளது.
இதனால், தற்போதே புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளதால் கடற்கரை, பூங்காக்கள் என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதன் காரணமாக புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையால் நகரின் அனைத்து பிரதான சாலைகள், வீதிகள் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பார்க்கிங் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதே போல் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு தங்கும் விடுதிகளில் வாடகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி எல்லை பகுதியான ஆரோவில், விழுப்புரம், மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க புதுச்சேரி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புத்தாண்டுக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு அரசு சார்பில் கடற்கரை சாலையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் காரணமாக கடற்கரையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பதால் அவர்களை கண்காணிக்கும் வகையில் அப்பகுதியில் 175 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சா் க லட்சுமிநாராயணன் கூறுகையில்,
ஆசியாவிலேயே சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் இதுவரை 19 லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனா். அவா்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட சுற்றுலாத் துறை சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக காவல் துறை, மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை, நகராட்சி இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரி மக்கள் நெரிசலில் சிக்கக் கூடாது என்பதற்காக ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்த உப்பளம் மைதானம், பாரதிதாசன் கல்லுாரி உள்பட பல இடங்களில் பாா்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து கடற்கரை வந்து செல்ல பேட்டரி பேருந்து சேவையும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் நாளை 31 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இன்னிசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை, லேசா் ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN