புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போக்குவரத்து மாற்றம் - புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு
புதுச்சேரி, 30 டிசம்பர் (ஹி.ச.) புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு , 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து எஸ்பி நித்யா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போக்குவரத்து மாற்றம்  - புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு


புதுச்சேரி, 30 டிசம்பர் (ஹி.ச.)

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு , 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து எஸ்பி நித்யா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 31-ம் தேதி இரவு கடற்கரைச் சாலை மற்றும் நகர மையப்பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வரும் 31-ம் தேதி மதியம் 2 மணி முதல் ஜன.1-ம் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், ஆம்பூர் சாலையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்படும்.

மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை தொடர்பாக அரசு மருத்துவமனையை அணுக, செயின்ட் ஆஞ்ச் வீதி-செஞ்சி சாலை, சூர்கூப் வீதி-செஞ்சி சாலை வழியாக அவசர வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள தேவாலயங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் வசதிக்காக தனித்தனியே நான்கு விதமான வெவ்வேறு வண்ணம் கொண்ட வாகன நுழைவு அட்டைகள் போக்குவரத்து எஸ்பி

(வடக்கு-கிழக்கு) அலுவலகத்தில் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும்.

எனவே, சம்பந்தப்பட்ட தேவையுள்ள நபர்கள் அரசினால் அளிக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை, இருப்பிடச் சான்று மற்றும் உணவகங்கள், தங்கும் விடுதிக்கான வர்த்தக உரிமம் நகலினை சமர்ப்பித்து வாகன நுழைவு அட்டைகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரி கடற்கரை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உப்பளம் புதிய துறைமுகம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி, பாண்டி மெரினா, ஒதியஞ்சாலை பழைய பேருந்து நிலைய வளாகம், நேரு வீதி பழைய சிறை வளாகம், செஞ்சி சாலை-புஸ்சி வீதி சந்திப்பு பழைய சட்டக் கல்லூரி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி, வாசவி இன்டர்நேஷனல் பள்ளி, கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் உள்ள பாத்திமா பள்ளி ஆகிய 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில், பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி, உப்பளம் பகுதியில் உள்ள நிறுத்துமிடம் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆம்பூர் சாலை மற்றும் மிஷன் வீதிகளுக்கிடையே உள்ள அனைத்து சாலைகள் தெருக்களின் தெற்குப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.

மேலும் இந்த வாகன நிறுத்துமிடங்களில் இருந்து 30 பிஆர்டிசி இலவச பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அதிகமான வாகனங்கள் வருகை தரும் நிலையில் ஈசிஆர் வழியாக புதுச்சேரிக்கு வரும் வாகனங்களுக்கு ஏழை மாரியம்மன் கோயில் சந்திப்பு, சிவாஜி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், செஞ்சி சாலை, முதலியார்பேட்டை சந்திப்பு, பட்டானிக்கடை சந்திப்பு, ஜிஆர்டி சந்திப்பு, அண்ணா 45 அடி சாலை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, நெல்லித்தோப்பு சந்திப்பு ஆகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும், புதுச்சேரி நகரப் பகுதியில் கனரக வாகனங்கள் இயக்கமும் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. பாண்டி மெரினாவுக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தின் உள்ள சாலைகளைப் பயன்படுத்தி பாண்டி மெரீனாவை நோக்கி வம்பாகீரப்பாளையம் சாலையின் வழியாகச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாண்டி மெரினாவிலிருந்து திரும்பும்போது, உள்ளே சென்ற இருசக்கர வாகனங்கள் கேட் எண்-3 வழியாகவும், நான்கு சக்கர வாகனங்கள் கேட் எண்-4 வழியாகவும் திருப்பி விடப்படும். புதுச்சேரி நகரப் பகுதியில் வெளிநகர மக்களும் சுற்றுலாப் பயணிகளும் எளிதில் வழிகாணும் வகையில், சுமார் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. விதிமீறல்கள் பதிவுசெய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் போக்குவரத்து விதிகளை மதித்து, போக்குவரத்து காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b