தமிழ்நாடு காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? தவாக வேல்முருகன் காட்டம்!
சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.) திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை
TVK Velmurugan


சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)

திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி பயணம் செய்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சுராஜ் என்பவரை, திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் ஏறிய கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் அரிவாளால் மிரட்டி, பின்னர் திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வைத்துக் கொடூரமாக வெட்டியுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் இருக்கும் சிறுவர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகி, பொது இடங்களில் ஆயுதம் ஏந்தி, ஒரு மனிதனை வெட்டி வீடியோ எடுத்து வெளியிடும் அளவுக்கு துணிச்சல் பெறுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதற்கான வெளிப்படையான சாட்சி தான் இது.

தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் கட்டுப்பாடின்றி உச்சத்தை எட்டியுள்ளது. எச்சரிக்கைகளும், வலியுறுத்தல்களும்,தொடர் போராட்டங்களும் நடைபெற்றாலும், காவல்துறை செவிமடுக்காமல் மெத்தனப் போக்கை கையாள்வது மிகுந்த வேதனைக்குரியது.

ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதாகவும், திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் கடத்தலின் மையமாக மாறி வருவதாகவும், முன்னரே பலமுறைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே திருத்தணியில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது என்றால், தமிழ்நாடு காவல் துறை போதைப்பொருள் ஒழிப்பில் தோல்வி அடைந்துள்ளது என்பதாகவே எண்ண தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் பொதுவெளிகளில் அச்சமின்றி நடமாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிறுவர்களைப் போதைப்பொருள் சுழலில் தள்ளிய கஞ்சா வியாபாரிகள், கடத்தல்காரர்கள், பின்னணியில் உள்ள சக்திகள் அனைத்தையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் மற்றும் ரயில் நிலையங்களை மையமாகக் கொண்ட கஞ்சா கடத்தலை முற்றாக ஒழிக்க, சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில், போதைப்பொருள் தடுப்பு சட்டங்களை மேலும் கடுமையாக்கி, நடைமுறையில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டை 'போதைப்பொருள் இல்லாத மாநிலமாக' மாற்றுவதற்கான தெளிவான, காலக்கெடு கொண்ட செயல்திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டுமென, தமிழ்நாட்டு அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN