Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 30 டிசம்பர் (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்காக இன்று (30-12-25) அதிகாலை 1.25 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பாவை பாசுரத்துடன் சொற்கவாசல் திறக்கப்பட்டது.
அதன் பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்ய தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர மாநில சபாநாயகர் அய்யனபாத்ரூடு , துணை சபாநாயகர் ரகுராமகிருஷ்ண ராஜு, நிதி அமைச்சர் பையாவுலு கேசவ், வேளாண்மை துறை அமைச்சர் அச்சன்நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடிகை ஸ்ரீலிலா உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து ஆன்லைனில் குலுக்கல் மூலம் வழங்கப்பட்ட இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் முன்கூட்டியே வரிசைகளில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்கு தங்க ரதத்தில் மலையப்ப சாமி பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் அருள் பாலித்தனர்.
இரவு 7 மணிக்கு அதியாயன உற்சவத்தில் இராபத்து உற்சவம் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்பு வரும் 11 நாட்கள் 12 ஆழ்வார்கள் எழுதிய நான்காயிரம் திவ்ய பிரபந்தத்தில் இருந்து 3000 திவ்ய பிரபந்தம் பாசுரங்கள்
பகல் பத்து உற்சவமாக ரங்கநாதர் மண்டபத்தில் பாராயணம் செய்யப்பட்டது.
இன்று இரவு முதல் 10 நாட்களுக்கு ராபத்து உற்சவம் தொடங்கப்பட உள்ளது. இதில் நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் ஒரு நாளைக்கு 100 பாசுரங்கள் என பாராயணம் செய்யப்பட உள்ளது. இரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு சொற்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
வைகுண்ட துவாதசியை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜனவரி 8 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
2 ம் தேதி முதல் 8ம் தேதி வரை தரிசன டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு நேரடியாக இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோயில் மற்றும் நான்கு மாட வீதி முழுவதும் பல்வேறு மலர் மற்றும் மின் அலங்காரம் செய்யப்பட்டது.
கோயிலுக்கு எதிரே மலர்கள், பழங்கள், மின் அலங்காரத்திற்கு மத்தில் வைகுண்டத்தில் ரங்கநாதர் லட்சுமியுடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட அரங்கத்தில் ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b