Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 டிசம்பர் (ஹி.ச)
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
பகல் பத்து 10ம் திருநாளான நேற்று (டிசம்பர் 29) நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக ராப்பத்து திருவாய்மொழி திருநாள் இன்று (டிசம்பர் 30) முதல் தொடங்கியது. இதன்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நம்பெருமாள் தனுர் லக்னத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.
2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருகை தந்தார். அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார். அப்போது 'கோவிந்தா கோவிந்தா' .. ரங்கா.. ரங்கா.. என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் முழக்கமிட்டனர்.
பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருகை தந்தார்.
அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதினார். அதன்பின் சாதரா மரியாதையாகி (பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் நேற்று மதியம் முதல் ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b