Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதே வேளையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்தது. இந்நிலையில், கடந்த ஜன.24-ம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது,
எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைக்க அரசு முடிவு செய்தது.
மாநில அரசின் நிதி நிலை, பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்த பரிந்துரையை அரசுக்கு அளிக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் மற்றும் நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தாயள் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரத்திக் தாயள் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்பித்திருந்தது.
தற்போது ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி இன்று (டிசம்பர் 30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
Hindusthan Samachar / vidya.b