புதுக்கோட்டையில் தனியார் பேருந்து லாரியில் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்
புதுக்கோட்டை, 30 டிசம்பர் (ஹி.ச.) சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 41 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் மேலூர் அருகே இன்று (டிசம்பர் 30) அதிகாலை சென்ற போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு முன்னே ச
புதுக்கோட்டையில் தனியார் பேருந்து லாரியில் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்


புதுக்கோட்டை, 30 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 41 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் மேலூர் அருகே இன்று (டிசம்பர் 30) அதிகாலை சென்ற போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்ற போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஒருபகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளனூர் காவல்துறையினர் மற்றும் சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிகாலையில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து சம்பவத்தால் அந்த சாலை முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடப்பதால் அந்த வழியாக செல்ல கூடிய வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரக்கூடிய நிலையில், அதிகாலையில் நடந்த இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b