திருவண்ணாமலையில் ஜனவரி 3-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா - முன்னேற்பாடுகள் தீவிரம்!
திருவண்ணாமலை, 31 டிசம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், சமீப காலமாக கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்
திருவண்ணாமலையில் ஜனவரி 3ம் தேதி ஆருத்ரா தரிசன விழா - முன்னேற்பாடுகள் தீவிரம்


திருவண்ணாமலை, 31 டிசம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், சமீப காலமாக கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுதினம் (ஜனவரி 2ம் தேதி) மாலை 6.45 மணிக்கு தொடங்கி, 3ம் தேதி மாலை 4.43 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 2ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதையொட்டி, வழக்கம் போல் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு, பவுர்ணமி சிறப்பு ரயில்களும் வேலூர் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னை- திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், ஆண்டுதோறும் அண்ணாமலையார் கோயிலில் விமரிசையாக நடைபெறும் ஆருத்ரா தரிசனம் விழா வரும் 3ம் தேதி நடைபெறவுள்ளது. அதையொட்டி, பவுர்ணமி தினமான 2ம் தேதி இரவு அலங்கார ரூபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர், திருக்கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

தொடர்ந்து, 3ம் தேதி காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆருத்ரா தரிசன விழாவும், மாட வீதியுலாவும் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜருக்கு, கார்த்திகை தீபத்தின்போது மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபச்சுடர் பிரசாதம் (தீபமை) அணிவிக்கப்படும். இதைதொடர்ந்து நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் விநியோகம் செய்யப்படும்.

அதேபோல் மற்ற பக்தர்கள் கட்டணம் செலுத்தி தீபமை பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் காரணமாக அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. சுமார் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசிக்கின்றனர்.

மேலும், புத்தாண்டின் தொடர்ச்சியாக பவுர்ணமி அமைந்திருப்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு தரிசனம், முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், பவுர்ணமி நாட்களில் பொது தரிசனம் மட்டுமே ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b