செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் சிசிடிவி மூலம் சிக்கினர்
புதுக்கோட்டை, 31 டிசம்பர் (ஹி.ச) புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே உள்ள ஏகனிவயல், தேடாக்கி கிராமத்தைச் சேர்ந்த சண்முகமும் அவரது மனைவி தெய்வானை (46) ஆகிய இருவரும், கடந்த 1ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் சரகம் ஊமத்தநாடு கிராமத்தில் தங்கள்
Chain Snatching


புதுக்கோட்டை, 31 டிசம்பர் (ஹி.ச)

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே உள்ள ஏகனிவயல், தேடாக்கி கிராமத்தைச் சேர்ந்த சண்முகமும் அவரது மனைவி தெய்வானை (46) ஆகிய இருவரும், கடந்த 1ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் சரகம் ஊமத்தநாடு கிராமத்தில் தங்கள் உறவினர் வீட்டில் நடந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காலை 10.40 மணிக்கு ரெட்டவயல் கடந்து கொலக்குடி, பாவேந்தர்புரம் மாந்தோப்பு அருகே காஸ்ட்லியான ஒரு பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தெய்வானை கழுத்தில் கிடந்த 4 சவரன் சங்க ஆரத்தை அறுத்துக் கொண்டு வேகமாக பறந்துவிட்டனர்.

தங்க நகையை பறித்துச் சென்ற இளைஞர்களின் பைக் அதிவேகமாகச் சென்றதால் சண்முகத்தின் பைக்கால் விரட்டி பிடிக்க முடியவில்லை. உடனே தெய்வானை பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பேராவூரணி போலீசார், அந்த வழியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். ஒரு சில கேமராக்களில் நகைகளை பறித்துச் சென்ற இளைஞர்களின் முகங்கள் பதிவாகி இருந்தது.

மேற்பனைக்காடு, கீரமங்கலம், கொத்தமங்கலம் வரை உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சில பதிவுகளையும் கைப்பற்றி கிரைம் டீம் போலீசார், அந்த இளைஞர்களை தேடி வந்னர்.

தஞ்சை மாவட்டத்தில் தங்க நகைகளை பறித்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் சென்றுள்ளனர் என்பதை உறுதி செய்த கிரைம் பட்டுக்கோட்டை டீம், அவர்களை பிடிக்க கடந்த ஒரு மாதமாக இடைவிடாமல் தேடினர்.

இறுதியில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சித்திரன்குடியிருப்பு சக்திவேல் மகன் ஸ்ரீராம் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் என்பதை உறுதி செய்து அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது தெய்வானையிடம் அறுத்த நகைகளை ஆவணத்தான்கோட்டை பகுதியில் ஒரு நகைகடையில் அடகு வைத்திருப்பது தெரிய வந்தது.

தாங்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத கிராமங்களுக்குள் வந்தாலும் சில இடங்களில் கேமராக்களில் சிக்கிவிட்டோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், இவர்கள் ஏற்கனவே இதே ஊரைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN