புதிய ஆண்டு போராட்டங்களின் ஆண்டாய் மலரட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து
சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சி மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளத
Shanmugam


L


சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சி மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆண்டு பிறப்பு என்பது

காலண்டர் கணக்கே ஆயினும் புதிய ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள். கனவுகளும், நம்பிக்கைகளுமே மனித குல வாழ்வை நடத்தி வந்திருக்கிறது.

கடந்து செல்லும் 2025ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த போராட்டங்கள் மக்களுக்கு அனுபவச் செறிவை உருவாக்கி தந்துள்ளது.

வலுவான சோசலிச முகாம் இல்லாத நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல் அரசின் இனவெறி பாலஸ்தீன மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் பாலஸ்தீன மக்களுக்கு உலகளாவிய ஆதரவும் அதிகரித்துள்ளது.

அநீதி நிறைந்த முதலாளித்துவத்தால் மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது என்பதையும்; சோசலிச சமூகம் அமைந்தாக வேண்டும் என்பதையுமே உலக நிகழ்வுகள் உணர்த்துகின்றன. சமத்துவத்திற்கான போராட்டம் இந்த புதிய ஆண்டில் இன்னும் வீரியமாக எழட்டும்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி விழுமியங்கள் கொண்ட அரசமைப்பு சட்டத்தையே அசைத்துப் பார்க்கிறது. அனைத்து பகுதி மக்கள் மீதும் அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. போராட்ட வியூகங்கள் மூலமே இந்த அக்கிரமத்தை முறியடிக்க முடியும். இதன் ஒருபகுதியாக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் 2026 பிப்ரவரி 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வெற்றி பெறுவதன் மூலமே மதச்சார்பின்மையையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சமத்துவ சமூகம் அமையவும், ஜாதிய, பாலின ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டவும், மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை காத்து நிற்கவும் புத்தாண்டில் புத்தெழுச்சியான போராட்டங்கள் அமைந்திடுவது அவசியமாகும்.

புதிய பாதைகளை புதிய ஆண்டு திறந்து விடும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

Hindusthan Samachar / P YUVARAJ