Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 31 டிசம்பர் (ஹி.ச.)
தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான, வரலாற்றுப் பின்னணி கொண்ட சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மார்கழி மாத வழிபாட்டிற்காக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் வருகை தந்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி - அம்மன் சந்நிதி, திருமுலைப்பால் உண்ட திருஞானசம்பந்தர் சுவாமி சந்நிதி மற்றும் கட்டுமலை மேல் வீற்றிருக்கும் சட்டைநாதர் சுவாமி சந்நிதிகளில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டார்.
வழிபாட்டிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த குருமகா சந்நிதானம், கடந்த 2023-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்து மிக முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்றபோது, மேற்கு கோபுர வாயிலின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக 22 ஐம்பொன் சிலைகளும், 462 தேவாரச் செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் செப்பேடுகள் அனைத்தும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துப் பேசிய குருமகா சந்நிதானம்,
ராஜராஜ சோழன் காலத்தில் ஓலைச்சுவடிகளாக இருந்த திருமுறைகள், இந்தச் சீர்காழித் தலத்தில் செப்பேடுகளாகக் கிடைத்துள்ளன. இது நம் காலத்தின் மிகப்பெரிய பொக்கிஷம்.
ஆனால், இந்தச் செப்பேடுகள் தற்போது ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அவை கோயிலில் ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டப்பட்டு, அரசுத் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது, என்றார்.
ஆயிரம் ஆண்டுகளாகப் பூமிக்குள் புதைந்து கிடந்த போது அந்தச் செப்பேடுகள் எப்படி இருந்தனவோ, அதே நிலையில்தான் இப்போதும் அந்தத் தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
முழுமையாகப் படிப்பதற்குக்கூட அவகாசம் வழங்கப்படாமல் அவை அடைக்கப்பட்டுள்ளதால், காற்றில் ஈரப்பதம் காரணமாக செப்பேடுகளில் பாசிகள் படர்ந்து பயனற்றதாகப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஞானசம்பந்தரின் பதிகங்கள் மட்டுமல்லாது, அப்பர் (நாவுக்கரசர்) மற்றும் சுந்தரரின் தேவாரப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக வரலாற்றின் சான்றுகள். அவற்றை ஆய்வாளர்கள் மூலம் முறையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
காட்சியகம் அமைக்க ஆதீனம் விருப்பம்
இந்தச் செப்பேடுகளின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்ய ஆதீனம் தயாராக உள்ளது.
தமிழக அரசு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்தச் செப்பேடுகளை ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு ஒப்படைத்தால், அவற்றை நவீனக் கண்ணாடிப் பேழைகளில் பாதுகாப்பாக வைத்து, அங்கேயே கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளையும் சேர்த்து ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுக் காட்சியகம் (Museum) அமைக்கப்படும். இதற்குத் தேவையான முழுச் செலவையும் தருமபுரம் ஆதீனமே ஏற்றுக்கொள்ளும், என்று உறுதி அளித்தார்.
தமிழக முதல்வருக்கு விடுத்த கோரிக்கை
இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மத்திய தொல்லியல் துறையிடம் பேசி, இந்தச் செப்பேடுகளைத் தமிழக அரசே பெற்று, அதைத் தருமபுரம் ஆதீனத்திடம் வழங்க உதவிட வேண்டும் என்றார். இது வெறும் ஆதீனத்தின் விருப்பம் மட்டுமல்ல, சீர்காழித் தொகுதி பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது கண்டெடுக்கப்பட்ட 462 செப்பேடுகள் தமிழக ஆன்மீக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்பட்டது. அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டால், தேவாரப் பாடல்களில் விடுபட்ட பகுதிகள் அல்லது கூடுதல் வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சூழலில் ஆதீனத்தின் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN