Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையின் முக்கிய சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், நீர்நிலைகள், திறந்த வெளிகள் மற்றும் காலி இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மாநகராட்சி கவனத்துக்கு வந்துள்ளது.
இத்தகைய செயல்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் காற்று மாசுபாடு, வெள்ள அபாயம் மற்றும் விபத்துகள் போன்ற பொதுச் சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதை தடுக்கும் வகையில் ‘சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டுதல்கள் - 2025’ மற்றும் ‘கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்கள் - 2025’ ஆகியவற்றின்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பொது இடங்களில் அங்கீகாரமின்றி கட்டுமானக் கழிவுகளை கொட்டும் வாகனங்களை அமலாக்கக் குழுவினர் கண்டறிந்தால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குற்றச் செயலில் ஈடுபட்ட வாகனத்தின் படங்கள் மற்றும் கொட்டப்பட்ட கழிவுகளின் விவரங்கள் ஆதாரங்களுடன் செல்போன் செயலியில் பதிவேற்றப்பட்டு, கொட்டப்படும் கழிவுகளின் அளவு அடிப்படையில் ஒரு டன்னுக்கு ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்கப்படும்.
விதிக்கப்பட்ட முழு அபராதத்தையும் செலுத்திய பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்படும். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
எனவே, கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கட்டிடக் கழிவுகளை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி அல்லது சேகரிப்பு மையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
விதிமீறலில் ஈடுபடுவோர் மீது எவ்வித விதிவிலக்கும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல உதவி ஆணையர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b