Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த அதிரடிகளைச் செய்து வரும் கூகுள் நிறுவனம், தற்போது தனது 'கூகுள் டாக்ஸ்' யூசர்களுக்காக ஒரு சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி உங்கள் டாக்குமெண்ட்டுகளை நீங்களே கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஆடியோ புக்கை கேட்பது போல, கூகுள் டாக்ஸே உங்களுக்கு வாசித்துக் காட்டும். ஜெமினி AI மூலம் இயங்கும் இந்த 'டெக்ஸ்ட்-டு-ஸ்பீச்' வசதி, பலரின் வேலையை எளிதாக்கப் போகிறது. இது தொடர்பான முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்த அப்டேட் யாருக்குப் பயன்படும்?
இந்த அம்சம், குறிப்பாக மூன்று தரப்பினருக்குப் பெரிய உதவியாக இருக்கும்:
பார்வையற்றவர்கள்: பார்வைத்திறன் குறைந்தவர்கள் ஆவணங்களை வாசிக்க சிரமப்படாமல், எளிதாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எடிட்டிங் செய்பவர்கள்: ஒரு கட்டுரையை நாமே எழுதும்போது சில எழுத்துப் பிழைகள் கண்ணில் படாது. ஆனால், அதை இன்னொருவர் வாசிக்கக் கேட்கும்போது, எங்கே தப்பு இருக்கிறது என்பதை ஈஸியாகக் கண்டுபிடித்துவிடலாம். மேலும், மற்ற வேலைகளைச் செய்துகொண்டே அல்லது டிராவல் செய்யும்போதே ஆவணங்களை ரிவியூ (Review) செய்ய இது வசதியாக இருக்கும்.
எப்படிப் பயன்படுத்துவது?
உங்கள் கூகுள் டாக்ஸை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்துவிட்டு, கீழ்க்கண்ட ஸ்டெப்ஸை பாலோ பண்ணுங்க:
* முதலில் உங்களுக்குத் தேவையான டாக்குமெண்ட்டைத் திறக்கவும்.
* மேலே உள்ள மெனுவில் Tools ஆப்ஷனுக்குச் செல்லவும்.
* அதில் Audio Playback என்பதைத் தேர்வு செய்யவும்.
* இப்போது திரையில் ஒரு சிறிய பிளேயர் தோன்றும். அதில் உள்ள 'Play' பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இந்த வசதியில் கூகுள் 7 விதமான குரல்களை வழங்கியுள்ளது. 'நரேட்டர்' அல்லது 'கோச்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குரல்கள், ரோபோக்கள் பேசுவது போல இயந்திரத்தனமாக இல்லாமல், மனிதர்கள் பேசுவது போலவே இயல்பாக ஒலிக்கின்றன.
மேலும், வாசிக்கும் வேகத்தை (Playback Speed) உங்கள் வசதிக்கு ஏற்பக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம் (0.5x முதல் 2.0x வரை).
நீங்கள் ஒரு டாக்குமெண்ட்டை மற்றவர்களுக்கு அனுப்பும்போது, அவர்களும் அதைக் கேட்கும் வகையில் ஆவணத்தின் உள்ளேயே 'ஆடியோ பட்டன்களை' செருக முடியும்.
ஆடியோ பிளேயரை திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி வைத்துக் கொண்டு மற்ற வேலைகளையும் கவனிக்கலாம்.
தற்போது ஆங்கிலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வரவுள்ளது.
தற்போது கூகுள் வொர்க்ஸ்பேஸ் மற்றும் ஜெமினி AI சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
நீண்ட நேரம் மொபைல் அல்லது லேப்டாப் திரையைப் பார்த்து படிக்கப் பிடிக்காதவர்களுக்கு, இந்த 'ஏஐ வாய்ஸ் ரீடர்' ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.
இது தவிர இன்னும் சில அப்டேட்டுகளும் இருக்கின்றன
சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள Gemini 2.5 Flash மாடல் மூலம், வாய்ஸ் ரீடர் வசதி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு ரோபோ பேசுவது போல இருந்த குரல்கள் மாறி, இப்போது 'மகிழ்ச்சி, கவலை போன்ற உணர்ச்சிகளுக்கு ஏற்ப குரலின் தொனியை மாற்றிக்கொள்ளும் வசதி வந்துள்ளது.
வாக்கியத்தின் சூழலைப் புரிந்துகொண்டு, எங்கே நிறுத்த வேண்டும், எங்கே வேகமாக வாசிக்க வேண்டும் என்பதை ஏஐ இப்போது துல்லியமாகச் செய்கிறது.
கூகுள் டாக்ஸில் நேரடியாகவே 'டீப் ரிசர்ச்' வசதி அறிமுகமாகியுள்ளது. நீங்கள் ஒரு தலைப்பைக் கொடுத்தால் போதும், கூகுளில் உள்ள கோடிக்கணக்கான தகவல்களை அலசி, ஆதாரங்களுடன் ஒரு முழுமையான ரிசர்ச் ரிப்போர்ட்டை சில நிமிடங்களில் இது தயாரித்துக் கொடுத்துவிடும்.
உங்கள் கூகுள் டாக்ஸ் கோப்புகளை அப்படியே வீடியோவாக மாற்றும் 'கூகுள் விட்ஸ்' வசதி தற்போது முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஒரு பிரசன்டேஷன் அல்லது டாக்குமெண்ட்டை கொடுத்தால், அதற்கு ஏற்ற படங்கள், பின்னணி இசை மற்றும் ஏஐ வாய்ஸ் ஓவர் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு வீடியோவாக மாற்றிக் கொடுக்கும்.
கூகுள் மீட் மூலம் நடக்கும் ஆன்லைன் மீட்டிங்குகளில் பேசப்படும் தகவல்களை, கூகுள் டாக்ஸில் தானாகவே 'நோட்ஸ்' எடுக்கும் வசதி வந்துள்ளது. மீட்டிங் முடிந்ததும், யார் என்ன பேசினார்கள், என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை ஒரு சம்மரியாக கூகுள் டாக்ஸே தயார் செய்துவிடும்.
ஜெமினி சைட் பேனல் அப்டேட்
கூகுள் டாக்ஸின் வலது பக்கத்தில் இருக்கும் சைட் பேனலில் இப்போது பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு டாக்குமெண்ட்டை எழுதிக்கொண்டிருக்கும்போதே, உங்கள் ஜிமெயிலில் வந்த தகவல்களைத் தேடி எடுத்து அந்த டாக்குமெண்ட்டில் சேர்க்கலாம். டாக்குமெண்ட்டுக்குத் தேவையான இமேஜ்களை நீங்கள் தேட வேண்டியதில்லை. சைட் பேனலில் கார் ஓட்டும் நாய் என்று டைப் செய்தால், ஏஐ உடனடியாகப் படத்தைத் தயார் செய்து கொடுத்துவிடும்.
Hindusthan Samachar / JANAKI RAM