பாரம்பரியமிக்க செட்டிநாடு இல்லத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
சிவகங்கை, 31 டிசம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம், காரைக்குடி என்றாலே நினைவுக்கு வருவது வானுயர்ந்த செட்டிநாடு கட்டடங்களும், அவர்களின் பாரம்பரியமும் தான். அந்த வகையில், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியில் 1926-ம் ஆண்டு கட்டப்பட்ட பாரம்பரியமிக்க செட
Chettinad House


சிவகங்கை, 31 டிசம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி என்றாலே நினைவுக்கு வருவது வானுயர்ந்த செட்டிநாடு கட்டடங்களும், அவர்களின் பாரம்பரியமும் தான்.

அந்த வகையில், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியில் 1926-ம் ஆண்டு கட்டப்பட்ட பாரம்பரியமிக்க செட்டிநாடு இல்லம் ஒன்றின் நூற்றாண்டு விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

வேலங்குடியைச் சேர்ந்த சகோதரர்களான பெரியண்ணன் மற்றும் சுப்பையா ஆகியோர் இணைந்து, கடந்த 1922-ம் ஆண்டு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்ட வீட்டின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர். நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இப்பணி 1926-ல் நிறைவடைந்தது.

'சின்னான் இல்லம்’ என்று அழைக்கப்படும் இந்த வீடு, தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 30 அறைகளைக் கொண்டு, செட்டிநாடு கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இந்த வீட்டின் தரைப்பகுதிக்கு புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸும், சுவர்களுக்கு இத்தாலியன் டைல்ஸும் பதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டின் முகப்பு நிலைகள் மற்றும் கதவுகள் அனைத்தும் விலை உயர்ந்த பர்மா தேக்கு மரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், 100 ஆண்டுகளைக் கடந்தும் இந்த இல்லம் இன்றும் கம்பீரமாகவும், கலைநயத்துடனும் காட்சியளிக்கிறது.

இந்த வீட்டை உருவாக்கிய பெரியண்ணன் மற்றும் சுப்பையா ஆகியோரின் வாரிசுகள் தற்போது இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த இல்லம் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இதனைப் புதுப்பித்து விழா கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி வீட்டைப் புதுப்பிக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவுற்றன.

நூற்றாண்டு விழாவை கொண்டாட, வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் அதிகமான உறவினர்கள் வேலங்குடியில் ஒன்று கூடினர்.

இந்த விழாவில், குடும்பத்துப் பெண்கள் அனைவரும் ஒரே வண்ணத்திலான சேலைகளை அணிந்து வந்து விழாவிற்கு மேலும் அழகு சேர்த்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாகப் பிரம்மாண்டமான கேக் வெட்டப்பட்டு மகிழ்ச்சி பகிரப்பட்டது. உறவுகளுக்குள் இருக்கும் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், குழந்தைகளுக்கான வரைபடம் மற்றும் கலர் அடிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

100 ஆண்டுகால பழமை வாய்ந்த வீட்டின் விழாவில், தலைமுறைகள் கடந்து உறவுகள் ஒன்றிணைந்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..

Hindusthan Samachar / ANANDHAN