Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 31 டிசம்பர் (ஹி.ச.)
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்
எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:
கொரோனா காலத்திற்குப் பிறகு அரசு பேருந்துகளை நாடும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மூன்று நாள் தொடர் விடுமுறைக்கு கூட
தற்பொழுது சிறப்பு பேருந்துகளை இயக்கி, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பயணித்திட, ஏதுவாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை தயாராகி வருகிறது.
நேற்று கூட கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்திலிருந்து எந்தெந்த பேருந்துகளை இயக்குவது என்பது குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி தேவைப்படும் இடங்களில் தனியார் பேருந்துகளை
ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, கடந்த ஆண்டு தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப் போலவே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக இயக்கப்பட்ட வால்வோ பேருந்துகளுக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு இருக்கிறது.
கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் என்ற எடப்பாடி பழனிச்சாமி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்...
ஒரு முதலமைச்சராக இருந்த அவருக்கு அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறது
அவரது காலத்திலும் கடன் வாங்கப்பட்டுள்ளது அவருக்கு முந்தைய ஆட்சி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் சக்தி எந்த அளவு உள்ளது அவர் எவ்வளவு கடன் வாங்கலாம் என ஒன்றிய அரசு குறியீடு வெளியிட்டுள்ளது நாம் அந்த குறியீட்டிற்கு குறைவாகத்தான் கடன் வாங்கியுள்ளோம்.
இவர்கள் ஒப்பிடும் பிற மாநிலங்கள் எல்லாம் அந்த குறியீட்டை தாண்டி தான் கடன் வாங்கி உள்ளனர். அதிக போக்குவரத்து கட்டமைப்பு எங்கு உள்ளது என இந்திய முழுவதும் சுற்றி பார்த்தவர்களுக்கு தெரியும் சாலை மற்றும் மின்சார கட்டமைப்பு என அனைத்திலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது இயல்பான ஒன்று தான்.
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் மீண்டும் இடம்பெறுமா? என்ற கேள்விக்கு...
இது ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே மாற்றப்பட்ட ஒன்று. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் வைத்ததே முத்தமிழறிஞர் கலைஞர் தான். பயன்பாட்டிற்கு மிக நீளமாக இருக்கின்றது என்பதற்காக, அதை மாற்றியது ஜெயலலிதா.
இப்பொழுது அது குறித்து போராடுகின்ற தலைவர்களெல்லாம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கேள்வி எழுப்பாமல், ஏதோ தற்பொழுது மாற்றப்பட்டது போன்று கேள்வி எழுப்புகின்றனர்.
தேவைப்படும் பட்சத்தில் தேவையான நேரத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam