Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
திமுக ஆட்சியில் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் பெருகி வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருத்தணியில் வடமாநில இளைஞர் ஒருவரை போதை இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கிய ரணம் ஆறும் முன்பே, கோவையில் உக்கடத்தைச் சேர்ந்த பஜித் கானும் அவரது நண்பரும் சரமாரியாகத் தாக்கியதில் கொல்கத்தா இளைஞர் திரு. சூரஜ் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பெரும் கோட்பாட்டை உலகுக்குப் பறைசாற்றிய தமிழ் மண்ணில், உழைத்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் இம்மண்ணிற்குள் எண்ணற்ற கனவுகளோடு நுழைந்த புலம்பெயர் தொழிலாளிகள் சமூகவிரோதிகளால் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
சமூகத்தில் இன மேலாண்மை வாதத்தையும், பிரிவினை விஷத்தையும் புலம்பெயர் தொழிலாளிகள் மீது பரப்பிய ஆளுங்கட்சி திமுகவினர் இந்த சம்பவங்களுக்கெல்லாம் மூல காரணகர்த்தாக்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்ச் சமூகத்தை போதையின் பாதையில் தள்ளி, இந்த நிலத்தைச் சீரழித்துவிட்டு தங்கள் குடும்பங்கள் மட்டும் அதிகாரத்தில் நிரந்தரமாக இருக்கும் என்று தப்புக் கணக்கு போடுகிறது ஒரு கூட்டம்.
வாழ்வாதாரம் தேடி வந்தோரை வதைக்கும் அளவிற்கு வன்முறையின் மையமாகத் தமிழகத்தை மாற்றியதுதான் இந்த நான்கரை ஆண்டுகால திமுக அரசின் சாதனை.
இது தான் தமிழகத்தைத் தலைகுனிய விடாது தாங்கள் பார்த்துக் கொள்ளும் லட்சணமா? பதில் கூறுங்கள் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களே என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ