Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
நாளை தொடங்கவுள்ள 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
மெரினா கடற்கரை உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து மூடப்படும். வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. அடையாறில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை,தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு மந்தைவெளி, லஸ் மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.
வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வழி செல்லலாம்.
தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு சாலையிலும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது. கொடி மரச் சாலையில், இரவு 8 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
கிரீன்வேஸில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஆர் கே மட் சாலையில் உள்ள U திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, ஆர்கே மடம் வழியாக செல்லலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b