Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 31 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களைத் தவிர்த்து மொத்தம் 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தத் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300 கிராம் நெய், 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய் ஆகியன இருக்கும். ரூ.800 மதிப்புள்ள இந்த பொங்கல் பொருட்கள் தொகுப்பு ஜன. 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் (கான்பெட்) இதைக் கொள்முதல் செய்து வழங்குகிறது.
இதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.26 கோடி செலவாகும். மேலும். இதில் கூட்டுறவு பால் நிறுவனமான பாண்லேவில் இருந்து நெய் விநியோகம் செய்ய அந்த நிறுவனத்துக்கு ரூ.8.75 கோடி அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி பிராந்தியத்தில் 2,63,386 ரேஷன் கார்டுகள், காரைக்காலில் 60,225. மாஹேவில் 7,981, ஏனாமில் 15,498 என மொத்தம் 3,47,090 ரேஷன் கார்டுகள் உள்ளன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு புதிதாக மாதந்தோறும் 2 கிலோ இலவச கோதுமை விநியோகம் செய்ய புதுச்சேரி அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b