Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச)
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் அருகே இன்று ஆறாவது நாளாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11.15 மணிக்கு போராட்டம் தொடங்கிய போது இடைநிலை ஆசிரியர்கள் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு காவல் துறையினரிடம் கேட்டனர்.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சாலை ஓரமாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கேட்டனர்.
போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கல்லூரி சாலையின் ஓரமாக காவல்துறையினர் அனுமதி கொடுத்தனர்.
12 25 மணிக்கு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ய தொடங்கினர். ஆசிரியர்கள் தாங்களாகவே காவல்துறை வாகனங்களில் ஏறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதே சமயத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆசிரியர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததாகவும் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளர் அனு சார்ஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டருடன் பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து சென்றனர்.
காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தங்களை சந்திக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறி காவல் துறையினர் மீண்டும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தின் வெளியே இறக்கிவிட்டு சென்றனர்.
பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும் தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் ராபர்ட் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ