Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 31 டிசம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட திருவப்பூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோவிலில் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
திருவப்பூர் அருகே உள்ள பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அப்போது பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தும், சிறுவர்களை தூக்கிக் கொண்டும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பக்தர்கள் கொண்டு வந்த பால் மற்றும் சந்தனம் குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் செல்லாயி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J