Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 31 டிசம்பர் (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் 2025-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை 2026 ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. இதனால் இந்த ஆண்டின் கடைசி நாள் என்பதாலும், அரையாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணத்தால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியுள்ளது.
அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர். தொடர்ந்து கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்த்து ரசிக்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த காணப்பட்டதால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
மேலும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், விவேகானந்தா கேந்த்ரா வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், மீனாட்சி சாலை, அரசு பணத்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளும் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b