Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 31 டிசம்பர் (ஹி.ச.)
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கும், தமிழகம், கேரளா போல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, கடந்த நவம்பர் 4ம் தேதி துவங்கியது.
முதலில் டிசம்பர் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், டிசம்பர் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப் பணிகள் ஜனவரி 1ம் தேதி தகுதி தேதியாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியலை ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம், ஜனவரி 6 - பிப்ரவரி 6 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உத்தர பிரதேசத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 6ம் தேதி வெளியிடப்படும்.
மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள், அதாவது மாநில வாக்காளர்களில் 18.7 சதவீதம் பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
எனினும், இப்பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாறியவர்கள், வேறு இடத்தில் பதிவு செய்தவர்கள் அல்லது கண்டறிய முடியாதவர்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் லக்னோ, காஜியாபாத், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் உள்ளிட்ட நகர்ப்புற மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM