Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)
திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநில இளைஞரை அரிவாளால் சிறார்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் சிறார்கள், அந்த இளைஞரை பட்டாகத்தி கொண்டு கொடூரமாகத் தாக்கி இது தொடர்பான விடியோவையும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் தளத்தில், ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.என பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN