பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்
விருதுநகர், 31 டிசம்பர் (ஹி.ச.) கடந்த 2007ல் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ என்ற படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’போன்ற பாடல்களை பாடி புகழ்பெற்ற கிராம
பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்


விருதுநகர், 31 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த 2007ல் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ என்ற படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’போன்ற பாடல்களை பாடி புகழ்பெற்ற கிராமிய பாடகி லட்சுமி அம்மாள்(75), உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த அவரது மறைவு கிராமிய கலைஞர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.லட்சுமி அம்மாள் திரைப்படங்களிலும், நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியிலும் புகழ்பெற்றவர்.

நாட்டுப்புற பாடல்களை பாடுவதற்காக, நுரையீரலில் இருந்து மூச்சுக்காற்றை எழுப்பி, உரத்த குரலில் அடிவயிற்றில் இருந்து கணீரென்று பாட வேண்டும்.இதற்கு லட்சுமி அம்மாளின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த 2016ல் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், லட்சுமி அம்மாளால் பாட முடியாத நிலை ஏற்பட்டது.

முன்னதாக லட்சுமி அம்மாளும், மறைந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாளும் இணைந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்பட தென்மாவட்டங்களுக்கு சென்று நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளனர். ‘பருத்திவீரன்’ படத்தில் பாடியிருந்த லட்சுமி அம்மாள், தொடர்ந்து 6 படங்களில் மட்டுமே பாடினார்.

அதற்கு மேல் உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், சிகிச்சைக்காக பணத்தை செலவு செய்து வறுமையில் வாடினார்.

இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.

இவரது மறைவிற்கு கிராமிய கலைஞர்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b