Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 டிசம்பர் (ஹி.ச.)
டில்லி மெட்ரோ நிறுவனம், விரிவாக்க பணிகளுக்காக யமுனை நதிக்கரையின் வெள்ளச் சமவெளிப் பகுதிகளில் யார்டுகள் அமைத்துள்ளன.
கான்கிரீட் தூண்கள் தயாரிப்பது உட்பட மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளுக்கான பொருட்கள் இந்த யார்டுகளில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த யார்டுகளை டிசம்பர் 11ம் தேதிக்குள் அகற்றி, இடத்தை டில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், நீதிபதி பிரதீபா எம். சிங், மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில ஆவணங்களை சமர்ப்பித்து,
டில்லி மாநகரில் காற்று மாசு நான்காம் நிலை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், இயந்திரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், யமுனை வெள்ள சமவெளி பகுதியில் அமைத்துள்ள ஆலைகள் மற்றும் யார்டுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. டில்லி மெட்ரோ ரயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேம்பாட்டுப் பணிகள் மிகவும் முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பேட்சிங் ஆலைகள், வார்ப்புத் தளம் ஆகியவற்றை அகற்ற 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
ஆனால், ஏப்ரல் 1ம் தேதி முதல் யமுனை நதிக்கரையில் எந்தப் பகுதியையும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயன்படுத்தக் கூடாது. அகற்றும் பணி முடிந்த பின், குப்பைகள், கட்டுமானக் கழிவுகள், இயந்திர பாகங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும்.
முற்றிலும் துப்புரவு செய்த பின், டில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும். இடத்தை பெற்றுக் கொண்ட அறிக்கையை ஏப்ரல் 10ம் தேதிக்குள் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b