Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்பூர், 31 டிசம்பர் (ஹி.ச.)
நாளை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதலே கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கும். புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
அந்த வகையில் டோங்க்-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் போலீசார் இன்று (டிசம்பர் 31) தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது புண்டி நோக்கி சென்று கொண்டு இருந்த வெண்மை நிற சொகுசு கார் ஒன்றை நிறுத்தி உள்ளே சோதனையிட்டனர்.
காரில் இருந்த 150 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 200 வெடிக்கும் பேட்டரிகள், 1100 மீ மின்சார வயர்கள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, காரில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து டிஎஸ்பி மிருத்யுஞ்சய் மிஸ்ரா கூறியதாவது,
காரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. யூரியா உர சாக்குகளில் 150 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இவை தவிர 200 வெடிக்கும் பேட்டரிகள், 1100 மீட்டர் மின் வயர்கள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளோம். 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் பெயர் சுரேந்திரா, மற்றொருவர் பெயர் மோச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் இந்த வெடிபொருட்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன,
யார் அனுப்பியது? எதற்காக ஒரே நேரத்தில் இவ்வளவு வெடிபொருட்கள் கொண்டு செல்லவேண்டும் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது என்றும் போலீசார் கூறி உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b