Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு , 4 டிசம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப் போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில், சம்பா பருவத்திற்கு 31,000 ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டித்வா' புயலால் நுாற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது பெய்துவரும் மழையில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தாலுகாக்களில், 1,250 ஏக்கர் நெற்பயிர்கள், நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
மூழ்கிய சாலைகள் தேசிய நெடுஞ் சாலையில் பரனுார், கூடுவாஞ்சேரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு மற்றும் வண்டலுார் - கேளம் பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை ஆகியவற்றில் உள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாராததால், சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
வீடுகளில் புகுந்த வெள்ளம் வன்னியநல்லுார், ஊரப்பாக்கம் ஐந்தாவது தெரு ஆகிய பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நீலமங்கலம், திருத்தேரி, படூர், கன்னிவாக்கம் ஆகிய பகுதிகளில், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் இருளர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில், ஊரக வளர்ச்சித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b