Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இனியாவதுமனசாட்சியுடன் செயல்பட வேண்டும்: வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த நவம்பர் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சமூக நீதி வழங்க இந்த ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அதே தலைவரைக் கொண்டு மீண்டும் அமைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல.
தமிழ்நாடு சமூக நீதி மண். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நினைத்திருந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியும், தமிழக அரசால் வழங்கப்பட்ட பணி வரம்பின் படியும் ஏராளமான சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடுவழங்க பரிந்துரைத்தல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அந்த ஆணையம் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஆணையத்திற்கு வழங்கப்பட்ட 6 பணிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதற்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றி வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளையும், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகளையும் பெற்றிருப்பார்கள். ஆனால், ஆணையம் கடமை தவறியதால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பையும், உயர்கல்வி வாய்ப்புகளையும் இழந்துத் தவிக்கின்றனர்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1345 நாள்களாகிவிட்டன.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டு இன்றுடன் 1058 நாள்கள் ஆகி விட்டன. ஆனால், இன்று வரை ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிரந்தரமான பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டதன் நோக்கமே சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்பது தான். புதிதாக நீதிபதி வீ.பாரதிதாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் இனியாவது அதன் கடமையை உணர்ந்து மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பது உள்பட அதற்கு வழங்கப்பட்டுள்ள சமூகநீதிக் கடமைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ