Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 4 டிசம்பர் (ஹி.ச.)
புதுவை காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 200 படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சின்ன காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மழை வெள்ளம் கடலுக்குள் இழுத்து சென்றது. இதைப்பார்த்த மீனவர்கள், அதை தடுத்தனர். இருப்பினும் 3 படகுகள், வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இந்த வலைகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
சின்ன காலாப்பட்டு மீனவர்கள் இன்று (டிச 04) கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காண துாண்டில் முள் வளைவு அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 2 படகுகள், மீன்பிடி வலைகளை சாலையில் போட்டு மறியல் செய்தனர்.
பள்ளி, கல்லுாரி, பணிக்குச் செல்லும் நேரத்தில் மறியல் நடந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் வாகனங்கள் நின்றது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் அங்கு வந்து வரும் 8-ம் தேதி துாண்டில் முள் வளைவு அமைக்க பூமி பூஜை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
இதையேற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தால் சுமார் 1 1/2 மணி நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b