சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து
சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.) கடந்த சில நாட்களாகவே ‘டிட்வா’ புயல் காரணமாக சென்னையில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் சென்னைக்கு வருகைபுரிகிற விமானங்கள என பல விமானங்கள் ரத்து
Chennai International Airport


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த சில நாட்களாகவே ‘டிட்வா’ புயல் காரணமாக சென்னையில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் சென்னைக்கு வருகைபுரிகிற விமானங்கள என பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் நிறைய விமானங்கள் தொடர்ந்து தாமதமாக வந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் முன்பதிவு செய்தவர்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (டிச.3) மாலையில் இருந்து படிப்படியாக மழை குறைந்தது. ஆனால் மழை ஓய்ந்த பின்பும் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 8 மணியில் இருந்து இன்று காலை 8 மணி வரை மும்பை, டெல்லி, அகமதாபாத், அந்தமான் ,ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், கொச்சி, கவுகாத்தி, கோவை, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 19 இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, புவனேஸ்வர், ராய்ப்பூர், இந்தூர், புனே, கோவை உள்ளிட்ட 20 இடங்களில் இருந்து, சென்னைக்கு வருகிற 20 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் கடந்த 12 மணி நேரத்தில் 39 விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த 39 விமானங்களும் இண்டிகோ ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவும், சென்னையில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும் இதேபோல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாமல், இன்று பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் 13 விமானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்படும் 11 விமானங்கள் என மொத்தம் 24 விமான சேவைகள் தாமதமாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்படும் இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN