Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)
மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த மருந்தை தயாரித்த தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது.
பின்னர் அம்மாநில போலீஸார் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, மருந்து கட்டுப்பாட்டுத் துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
முறையான அனுமதி இல்லாமல் இந்நிறுவன மருந்தை ஏற்றுமதி செய்ய தடையின்மை சான்று வழங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் இணை இயக்குநரான கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் சென்னை, காஞ்சிபுரத்தில் அந்நிறுவனம் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், ரங்கநாதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.2.04 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தனது லாபத்தை உயர்த்திக்கொள்ள சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
இருமல் மருந்து தயாரிக்க தரமற்ற மூலப்பொருட்களை பயன்படுத்தியதுடன், முறையாக தரப் பரிசோதனை செய்யாமல், ரசீதுகள் இன்றி மூலப்பொருட்களை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்நிறுவனத்தின் உரிமையாளருடன் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தொடர்பில் இருந்து கொண்டு, சட்டப்படி நடத்தவேண்டிய வருடாந்திர ஆய்வு மற்றும் தணிக்கைகளை நடத்தவில்லை. இது தொடர்பாக, மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடந்தது.
சோதனையில் நிறுவனம் தொடர்பான நிதி ஆவணங்கள், மருந்து கொள்முதல் தொடர்பான ஆவணங்கள், மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில், மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான கோடம்பாக்கத்தில் உள்ள ரூ.2.04 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் அடங்கும். தற்போது அந்த அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN