Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச)
இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தென்காசி நகரின் முக்கியச் சந்திப்புப் பகுதியான நடுபல்க் சிக்னல் அருகே செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமியை, அவரது அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொடும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
நகரின் மையப்பகுதியில் இப்படியொரு கொடூரத்தைத் துணிச்சலாக அரங்கேற்றுமளவிற்குத் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கொள்ளையடிப்பது, கொலை செய்வது, போதையில் நடுசாலையில் திரிவது, பாலியல் ரீதியாக அத்துமீறுவது எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட திமுக ஆட்சியில், பொதுமக்கள் முதல் ஆசிரியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அரசுத் துறையில் பணியாற்றுபவர்கள் வரை அனைவரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் நாட்களைக் கடத்துகின்றனர். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?
திமுக ஆட்சியில், வழக்குகளும், கைதுகளும், என்கவுண்டர்களும் மட்டும் தான் பெருகுகின்றனவே தவிர குற்றங்கள் ஏன் இன்னும் குறையவில்லை? ஆக, தமிழகக் காவல்துறையின் ஈரல் மொத்தமாக அழுகி விட்டது என்று தானே பொருள்? சட்டம் ஒழுங்கின் இதயத் துடிப்பு முழுவதுமாக நின்று போய்விட்டது என்பது தானே அர்த்தம்? இப்படிப் பாழாய்ப் போன அரசு இயந்திரத்தைப் பழுது பார்க்காமல், அடுத்த விளம்பர ஷூட்டிங்கிற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்குக் கடைநிலை அரசு ஊழியராகப் பதவி வகிக்கக் கூடத் தகுதியில்லை என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ