Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 4 டிசம்பர் (ஹி.ச)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள கீழ்சிவிரி மற்றும் நல்லாவூர் கிராமத்தில் ஐயனார், திரவுபதி அம்மன் கோயிலில் மனைவி சவுமியாவுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.4) வழிபாடு செய்தார்.
முன்னதாக, மரக்காணம் மற்றும் நல்லாளம் கூட்டுச்சாலையில் அம்பேத்கர் சிலைக்கு அன்புமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் கீழ்சிவிரியில் நியாய விலை கடையை சவுமியா திறந்து வைத்தபோது அவர் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது,
பாமக தலைவராக இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை என்னை நீடித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, தேர்தல் ஆணையம் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது, உட்கட்சி பிரச்சினை இருந்தால் சிவில் நீதிமன்றத்தில் வாதம் செய்யலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக நான் தொடருவேன். மாம்பழம் சின்னமும் எங்களிடம் உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும், கடந்த 2 மாதத்துக்கு முன்பு, இதே தீர்ப்பைத்தான் வழங்கினார். உட்கட்சி பிரச்சினை இருந்தால் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என அவரும் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தில், எந்தக் கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.
மாம்பழம் சின்னத்தை பற்றி நீதிமன்றம் எதுவும் கூறவில்லை. இதனால் குழப்பம் இல்லை. பாமக தலைவராக தொடர்ந்து நான் நீடிப்பேன். தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரம் தொடரும். நீதிமன்றத்தில் அவர்கள் (ராமதாஸ்) செய்ய இருப்பதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். பாமகவில் குழப்பம் இல்லை. கூடுதலாக வாக்குகள் கிடைக்கும். பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த திமுக கைக்கூலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. திமுக சொல்வதை பாமகவில் உள்ள கைக்கூலிகள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இந்த ஆண்டு நடத்திய 7 தேர்வில் 10 ஆயிரம் பேருக்குதான் பணி வழங்கி உள்ளனர். அடுத்த ஆண்டு 6 தேர்வு என்றால் 6 ஆயிரம் பேருக்குதான் வேலை கிடைக்கும். திமுக ஆட்சியில் அரசு பணிகளை, ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விடுகின்றனர். ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 7 லட்சம் பணியிடம் காலியாக இருந்தும், நிரப்பப்படவில்லை.
போக்குவரத்து, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கி இருக்கின்றனர். கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என உள்ளனர். பணம் கொடுப்பவர்களுக்கு ஒப்பந்தம் வழங்குகின்றனர். திமுக முன்னாள் எம்பி விஜயன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை.
தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும். பாமக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும். திமுக கூட்டணி தோல்வி அடையும். திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஆன்மிகத்தில் சர்ச்சை வரக் கூடாது, அரசியலும் செய்யக் கூடாது, குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடாது. நீதிமன்றம் சொல்வதை கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b