திருப்பரங்குன்றம் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை, 4 டிசம்பர் (ஹி.ச.) தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை அன்று ok மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலைய
Thirupparangundram


மதுரை, 4 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை அன்று ok மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராம ரவிக்குமார் என்பவர் தொடுத்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத்தூணில் அறநிலையத்துறை தீபம் ஏற்றாததை கண்டித்து, இந்து முன்னணி, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் மலை மீதுள்ள தீபத் தூணுக்கு பழனியாண்டவர் கோயில் வழியாக செல்ல முயன்றனர்.

அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட மோதலில் இரு போலீசார் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு, அசாதாரண சூழல் நிலவியதால், திருப்பரங்குன்றம் மலை பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 15 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN