Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 4 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்பட்ட பதற்றம் தொடர்பாக மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதிட்டது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக அரசு தரப்பு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென நேற்றிரவு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா முன் முறையீடு செய்யப்பட்டது.
உடனடியாக ஐகோர்ட் கிளையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் வருமாறு:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.
நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது.
இந்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் ஒரு படையையே திரட்டிச் சென்றார்.
மேலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை.
அவர்களை சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. மேலும், மனுதாரரை பாதுகாப்பதும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியல்ல. மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் உள்ளது.
அவரால் திரண்ட கூட்டத்தினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் போலீஸ் மீது தாக்குதல் நடந்தது. காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.
மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அரசுத் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN