Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)
காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு,
அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் கொலை:
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எங்கே போகிறது?என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகன் என்பவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதே தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்ற வழக்கறிஞர் நேற்று முன்நாள் காலை அவரது அலுவலகத்தில் அமர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல் சரமாரியாக படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளது.
திமுகவைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டு 3 நாள்களாகும் நிலையில் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பதைக் கூட காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
அதே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக நிர்வாகி ஹரிஷ் என்பவர் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கொலைகள் எவ்வளவு மலிவானவையாகி விட்டன என்பதற்கு அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகள் தான் சான்றாகும்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் காவல்துறையினர், சட்டத்தைப் பாதுகாத்து நீதியை நிலை நிறுத்த வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள். ஆனால், காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்குமே பாதுகாப்பற்ற நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். கொள்ளைகளும் பெருகி விட்டன. ஆனால், அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. ஊழல்களைத் தவிர வேறு எதிலும் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ