Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 5 டிசம்பர் (ஹி.ச.)
சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ஊராட்சி கல்லுங்கோடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகள் செல்லப்பாண்டி – பாண்டி மீனா தம்பதியர். இவர்களுக்கு தங்கேஸ்வரன் (11) மற்றும் நரேஷ் ( 8) ஆகிய இரண்டு புதல்வர்கள். இவ்விரு சிறுவர்களும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
கல்லீரல் நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை என்றால் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவுகள் பல லட்சங்கள் வரை ஆகும். தங்களது வறுமையான குடும்பச் சூழலுக்கு ஏற்ப, எந்த வகையில் மருத்துவம் பார்த்தால் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் என்று செய்வதறியாது தவித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு இந்த
விபரம் தெரியவந்துள்ளது.
அச்சிறுவர்கள் இருவரையும் உடனே மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்போது அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பா.சரவணனும் உடன் சென்றார்.
என்னதான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் வெளியூரான மதுரையில் தங்கி அக்குடும்பம் மருத்துவம் உள்ளிட்ட இதர செலவுகளைச் சமாளிப்பதற்கு வெகுவாக சிரமப்படும் என்பதை அவர்களது நிலையில் இருந்து உணர்ந்திருந்த ராஜேந்திர பாலாஜி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
Hindusthan Samachar / ANANDHAN