Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 5 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 85க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாகக் பாலமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சிறையில் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது அருப்புக்கோட்டையில் பதிவாகியிருந்த திருட்டு வழக்கு ஒன்றிற்காக அருப்புக்கோட்டை போலீசார் அவரை கேரளாவிற்குச் சென்று கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் அழைத்து வந்தனர்.
அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் திருச்சூர் சிறைச்சாலைக்கு நவம்பர் மாதம் 4ஆம் தேதி கொண்டு சென்றுக் கொண்டிருந்தபோது பாலமுருகன் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனையடுத்து கடையம் பகுதியில் அமைந்துள்ள ராமநதி அணைக்கட்டு அருகில் உள்ள சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைக்குன்றில் அவரும், அவரது மனைவி ஜோஸ்னா என இருவரும் ஒரு மாதமாகத் தலைமறைவாகப் பதுங்கி இருப்பதாகக் கடையம் போலீசாருக்கு நேற்று (டிச 04) தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை முதல் மலையைச் சுற்றித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 40க்கும் மேற்பட்ட போலீசார் மலையில் இருந்து இறங்கிவிட்டனர். இருப்பினும் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமலும், மலை மேலேயும் ஏற முடியாமலும் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து ஆலங்குளம் தென்காசி, கடையநல்லூர், மற்றும் சுரண்டை ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இரவு 10 மணிக்கு மேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி இன்று (டிச 05) அதிகாலை 4 மணியளவில் 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மற்ற இருவரையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் ரவுடி பாலமுருகனையும், அவரது மனைவி ஜோஸ்னாவையும் தேடும் பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b